நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, ​​ அதன் பலன் குறைந்த வருமானம்

பெறுபவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

 பல பரிமாண வறுமையை 10% வரை குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம்

-நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் இலங்கையில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக

நிர்மாணித்ததை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு இன்று (03) முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம்பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில்

உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப்


பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு

செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில்

ஒன்றாகும்.

அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார்.

இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன்.

இலங்கைக்குச் சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில் நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன் அரச செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நெதர்லாந்து நாட்டுத் தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற

மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா, போர்சைட் இன்ஜினியரிங்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க் பிரான்சென் (Dirk Fransen)உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

03.06.2024